மாக்களாய் மக்கள்....

                                                                             


கேட்கிறீர் நீவீர்

இரவில் விழிப்பு 

பகலில் உறக்கம் ஏன் எனவே.


உண்மைகளை 

இலட்சம் இலட்சமாய் 

கொட்டிக் கொடுக்குது இரவு, 

பகல் பொழுது தருவதில்லை 

பத்து பைசா எனக்கு என்கிறேன் நான்.


"ஐயனே தவிர 'ஐ' என்றில்லை என்கிற

உண்மை அறிந்து கொள்ள 

உதவும் கரை இரவு;

இவ்வுண்மை உணராதவரை 

உதவா கரை பார் போற்றும் பகல். 

சிந்திக்கத் துணிவீரோ நீவீர்?" -

உண்மை சொல்லி 

உரக்க கேட்கிறான் நம் இறைவன்.


ஊர் உறங்கையில் விழிப்பும் 

ஊர் விழிக்கையில் உறக்கமும் 

இயற்கை குறித்த

வெறுப்பில் விளைந்தது அல்ல.

இயல்பான சிந்தனை வறண்டு

மாக்களாய் போன என் மக்கள் குறித்த

வேதனையில் மலர்ந்தது அது. 


முன் தூங்கி முன் எழாமல் 

பின் தூங்கி பின் விழித்தல் 

முரண் என முனகுகின்றீர்.  

முரணல்ல அது அரண் என்றறிவீரோ?


ஊரோடு ஒத்து வாழ் என்கிறீர். 

வெற்று ஊரோடு ஒத்து வாழ்வதெப்படி?


வெற்று ஊரா என வியக்கிறீர். 

மந்தை மந்தையாய் மாக்களை மக்கள் என்கிறீரா?


மக்கள் மாக்களா என விளிக்கிறீர். 

சிந்திக்க மறுக்கும் மக்களை மாக்கள் என நானா சொன்னேன்?


சிந்திப்பதால் என்ன பலன் என சிணுங்குகிறீர். 

என்ன பலன் என்றேனும் சிந்திக்க மறுப்பதேன்?


ஒன்றுமில்லையெனில் ஒத்துக் கொள்வீரா?

பலன்களை பட்டியலிட்டால் படிந்துதான் போவீரா?


முன் செல்லும் ஆடு 

எதற்கோ தவ்விச் செல்ல 

தவ்வி தவ்விச் செல்கின்றன 

பின் செல்லும் அத்தனை ஆடுகளும் 

ஊரோடு ஒத்து வாழ்வதால். 


கருத்தின் ஆழம் பார்க்காது 

கருத்து சொல்பவனை வணங்கி 

காரணமே தெரியாமல் 

தவ்வித் தவ்விச் செல்லும் 

கருப்பு ஆடுகளாய் மாறிவிட்ட 

உங்களோடு ஒத்து வாழ   

ம்ம்மா....ம்ம்ம்மமே என உங்கள் குரலில் 

என்னையுமா எகத்தாளமாய் அழைக்கிறீர்?


காரணமே அறியாமல் 

தவ்விக்கொண்டே இருத்தல் சுகம் 

முகம் நசுங்க தடுக்கி 

தரையில் விழும் வரையில்.


தூரப் போங்கள் துணுக்குகளே

என் அழகிய முகம் எனக்கு முக்கியம் 

தவ்வும் சுகத்தை விடவும்.


நீங்கள் சிந்தித்து செயல்படத் தொடங்கினால் 

உங்களோடு விழிக்கும் 

என் விழிகள். 

உங்களோடு உறங்கும் 

என் உடல். 


அதுவரையிலும்.... 

உங்கள் உதயம் எனக்கு அஸ்தமனம்

என் அஸ்தமனத்தில் ஓர் முழு நிலா 

எப்போதும் நீர் பார்க்கிலீர்.

உங்கள் அஸ்தமனம் எனக்கு உதயம் 

என் உதயத்தில் ஓர் சூரியன் 

எப்போதும் நீர் காண்கிலீர்.


விவகாரங்கள் அனைத்திலும் விகாரம் காட்டும் 

மாக்களாய் போன மக்களை விடவும் 

எனக்குப் பிடிக்கிறது 

விகாரத்திலும் விவரங்கள் காட்டும் 

மாக்களாய் மாக்கள். 


மாக்களான மக்களின் 

அலங்கார வார்த்தைகளில் அபஸ்வர ஓசை. 

மாக்களான மாக்களின் 

ம்ம்ம்மா....ம்ம்ம்மமே என்கிற இயற்கை இசையோ 

இப்போது ஸ்வரங்களாய் என் செவிகளில்.

இணைந்து பாடத் தேவையில்லை 

ஸ்முயூல் என்கிற இசைச்  செயலி. 


ம்ம்ம்மா....ம்ம்ம்மே

ம்ம்ம்மா....ம்ம்ம்மே

ம்ம்ம்மா....ம்ம்ம்மே.

Comments

Popular posts from this blog

சஹாரா பூக்கள் பூத்ததோ....

வாழ வைக்கும் காதலுக்கு ஜே.....

ஆணும், பெண்ணும்....இறைவனும்