என்னை தொலைத்து நான் நீயாக....

                                                                         


இமைகள் தாழ்கையில் 

உள்ளே ஊடுருவி 

உறைந்து கொள்கிறாய்

இதயம் முழுதும்.


இமைகள் திறக்கையில் 

கண்களுக்குள் வந்து 

கதகளி செய்கிறாய்.


பார்ப்பவை என் விழிகளாயினும் 

பார்த்தல் நீயே என்பதால் 

நீ பார்ப்பது எல்லாம் 

அட உன் முகம் தானே.


அமைதியான இரவுகளிலும் 

என் செவிகளுக்கில்லை ஓய்வு.

இசையாக  செவிகளில் 

அப்போதும் நீ. 

ஆயினும் 

நீ கேட்பது எல்லாம் 

அட உன் குரல் தானே.


நான்...

ஆசையே துன்பத்திற்கு காரணம் சொன்ன 

புத்தனும் அல்ல; 

அனைத்திற்கும் ஆசைப்படு சொன்ன 

சத்குருவும் அல்ல; 

இருவருக்கும் நடுவே 

இருந்து இறந்து போனவன்.


உள்ளத்தில் ஒளியாக,

விழிகளில் வழியாக, 

சொல், செயல், 

நடை, உடையென 

தோற்றத்தில் நானாய் தெரியும் என்னில் 

நிஜத்தில் தெரிவதென்னவோ நீயே. 


உன்னில் என்னை தொலைத்தது 

இத்தனை சுகமென்று தெரிந்திருந்தால் 

தொலைத்தலை செய்திருப்பேன் 

உன்னை உணர்ந்த நொடியிலேயே. 


எடுத்தோம் கவிழ்த்தோம் என 

எதையும் செய்து பழக்கமில்லையாதலால் 

இத்தனை காலமாயிற்று 

உன் இச்சைப்படி  

நானாய்  இருந்த என் மனம் 

உன் இஷ்டப்படி  

நீயாய் நிலை மாற.


தொலைத்த இடம் 

உன்னில் எனக்கான சொர்க்கம் என்பதால் 

தொலைத்த கனத்தில் மூடிக் கொண்டன 

சொர்க்கத்தின் கதவுகள். 

இனி மீட்சிக்கு வழியில்லை; 

மீளும் எண்ணமும் எனக்கில்லை.


இனி....

நீ நீயாக 

நானும் நீயாக 

பூலோக  சொர்க்கத்தில் 

பட்டுப்பூச்சியாய் பறந்து திரிந்தே 

நம் வாழ்க்கை உன் வடிவில்.  


நீ எத்தனை அழகோ 

அத்தனை அழகாய் வாழ்கிறாய் 

நம் வாழ்க்கையை. 


தொலைத்தலை செய்திருக்கலாம் எப்போதோ. 

செய்தேனே இந்த இடியட்

இப்போதாயினும்.

Comments

Popular posts from this blog

நிஜமும் நடிப்பும் ....நானும் நாமும்

சஹாரா பூக்கள் பூத்ததோ....

வாராயோ என் தோழி வாராயோ?