கடவுள் பாதி மிருகம் பாதி....
"கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்
வெளியே மிருகம் உள்ளே கடவுள் விளங்க முடியா கவிதை நான்
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்க பார்க்கின்றேன்
ஆனால்.......
கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே"
விண்ணையும் மண்ணையும் ரசிப்பவன்
தன்னையும் பெண்ணையும் ரசிக்க மறப்பதில்லை மறுப்பதும் இல்லை
விண்ணையும் மண்ணையும், தன்னையும் பெண்ணையும் ரசிக்கையில்
மிருகம் கொன்று கடவுள் வளர்க்கின்றான்
புல்லையும் பூவையும் நேசிப்பவன்
தன்னையும் பெண்ணையும் நேசித்து நெகிழ்கிறான்
நேசித்து நெகிழ்கையில் மிருகம் கொன்று உணவாய் தின்று
கடவுள் வளர்த்து வாழ்க வாழ்கவென வாழ்கின்றான்
அடங்கா திமிர் தெறிக்கும் ஆணவத் தோள்கள் கொண்டவன்
அடங்கா அன்பு தெறிக்கும் பெண்ணவளின் பட்டுத் தோள்களில்
முகம் புதைக்கையில் அடங்கா ஆணவம் தொலைத்து அன்பு வளர்க்கின்றான்
மின்னலென மின்னும் அவள் மென் விழிகளில்
தன் முகமும் அகமும் கண்டவன்
மிருக குணம் தொலைத்து மிருதுவாகிறான்
மிருதுவாகையில் கடவுள் வளர்த்து மிருகம் கொல்கின்றான்
ஆணவம் மட்டுமே அறிந்த ஆண் அவன்
அவள் அன்பு புரிகையில் அமைதியாகிறான்
அந்த அமைதியில் மிருகம் தொலைத்து கடவுள் மட்டும் காண்கின்றான்
எரியும் உள்ள நெருப்பில் தெறிக்கும் எண்ணெய் இல்லை அவளின் பெண்மை
தன் இதழ் எச்சத்தால் நெருப்பு அணைக்கும் நேர் நெறி அவளின் மென்மை
ஆணுக்குள் மிருகம் வைத்த ஆண்டவன்
மிருகம் கொல்லும் மென்மையை...அந்த மேன் மையை
பெண்மைக்குள் வைத்த அதிசயம் என்னவென்பேன்
Comments
Post a Comment