மனிதர் புரிந்து கொள்ள.....
நீல வானை கடந்தன வெள்ளைப் பறவைகள்....
வானம் வெள்ளையானது,
பறவைகள் நீலமாயின.
மழை பொழிந்தது.....
மண் மகிழ்ந்தது,
வானம் வறண்டது.
என்னவளை நான் கடந்தேன்.......
என் நேசம் அவளிடத்தில்,
அவள் சுவாசம் என்னிடத்தில்.
அவள் அன்பை பொழிந்தாள் என் மீது....
என் உள்ளம் நெகிழ்ந்தது,
அவள் உள்ளம் மகிழ்ந்தது.
ஒன்றைப் பெற ஒன்றை இழக்க வேண்டுமாம்
இழப்பில்லை இங்கே எவருக்கும்.
இந்த விந்தை எப்போதும் நிகழ்வதெப்படி?
எங்கள் அன்பு....
எத்தனை கொடுத்தாலும் குறைவதில்லை
எத்தனை பெற்றாலும் நிறைவதில்லை
வெள்ளையாய் மாறும் நீலவானில்லை
நீலமாய் மாறும் வெள்ளைப் பறவையில்லை.
என்னை இழந்து நான் அவளைப் பெறுவதில்லை
தன்னை இழந்து அவள் என்னைப் பெறுவதில்லை
நான் நானாக என் போக்கில்
அவளை என் அறிவிலும் உணர்விலும் சுமந்து.
அவள் அவளாக
என்னை தன் உயிரில் சுமந்து.
என்னை நான் இழக்காத;
அவளை அவள் இழக்காத;
அற்புதம் எங்களின் எங்கள் மீதான அன்பு.
இறுமாப்பில்
நிமிர்ந்து மட்டுமே நிற்பதில்லை நாங்கள்
தன்மையாய்
வளைந்தும் நிற்கிறோம் அவ்வப்போது.
நாங்கள் வளையும் போதெல்லாம்
பிரபஞ்சம் எங்களை வாழ்த்துகிறது
வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில்.
என்னை அவள் அழைக்க
அவளை நான் விளிக்க
அவள் அழைப்பிலும்
என் விளிப்பிலும்
எங்களுக்கு தான் எத்தனை பேரானந்தம்?
மானே தேனே இல்லாத
எங்களின் அன்பு
பிரபஞ்சம் போற்றும் பேரன்பு.
மனிதர் புரிந்து கொள்ள
இது மனித அன்பு அல்ல;
அதையும் தாண்டி
புனிதமானது ...புனிதமானது.
Comments
Post a Comment