வாராயோ என் தோழி வாராயோ?
உடல் முதிர்ச்சி
உண்பதின் ஊட்டம் பொறுத்து.
அறிவு முதிர்ச்சி
தேடலின் ஆழம் பொறுத்து.
மன முதிர்ச்சி
அனுபவங்களின் அதிர்வு பொறுத்து.
நிழலின் அருமை
வெயிலின் வேகம் பொறுத்து.
மழையின் அளவு
மேகத்தின் ஓட்டம் பொறுத்து.
புயலின் வேகம்
காற்றின் ஆட்டம் பொறுத்து.
படகின் ஆட்டம்
அலைகளின் அசைவைப் பொறுத்து.
நீல வானில் நிலவின் அழகு
பார்ப்பவர் கண்ணைப் பொறுத்து.
பூக்களின் புனிதம்
பூஜைக்கா பூக்கள் என்பதைப் பொறுத்து.
முகத்தின் அழகு
அகத்தைப் பொறுத்து.
அகத்தின் அழகு
இறைவனின் இசைவைப் பொறுத்து.
பக்தி என்பது
தேவையைப் பொறுத்து.
தேவை என்பது
ஆசையின் அளவைப் பொறுத்து.
என்னை நீ புரிவது
என் மீதான உன் அன்பைப் பொறுத்து.
உன்னை நான் புரிவது
உன் மீதான என் அன்பைப் பொறுத்து.
என் மீதான உன் அன்பென்பது
என்னை நீ புரிவதைப் பொறுத்து.
உன் மீதான என் அன்பென்பது
உன்னை நான் புரிவதைப் பொறுத்து.
அன்புடன் புரிந்து
அன்பிற்காய் புரிந்து
புரிந்ததால் நெகிழ்ந்து
நெகிழ்ந்ததால் மகிழ்ந்து
மகிழ்ந்ததால் குழைந்து
குழைந்ததால் கூடி
கூடியதால் குழந்தைகள் பெற்று
பெற்றவைகளைப் போற்றி வளர்த்து
வளர்ந்தவை மகிழ்வுடன் வாழ்வதை பார்த்தபின்
வயதாகியும் வியாதிகளற்ற
அமைதியான ஓரிரவில்
உடல்களை உதிர்த்து
உள்ளங்களால் ஒன்றிணைந்து
அருவமான உருவம் கொண்டு
பிரபஞ்சமெங்கும் போவோமா ஊர்கோலம்?
வாராயோ என் தோழி வாராயோ?
முடிவிலா ஓர் இன்ப வாழ்க்கை
இசைவோடு என்னோடு வாழ
வாராயோ என் தோழி வாராயோ?
Comments
Post a Comment