வாழ வைக்கும் காதலுக்கு ஜே.....
விடாது கொட்டிய மழையில்
கட்டாந்தரை களிமண் பூமி
களகளத்து கொழ கொழ சகதியானது.
வீட்டில் வேண்டுமளவும் வெங்காயம் இருக்க
இன்னும் கொஞ்சம் வாங்கிவரச் சொல்லி
எதற்காக இந்த வெங்காயத்தை
விரட்டி அடிக்கிறாள்
என் காதல் மனைவி?
வியப்போடு வெளியேறினேன்
வெள்ளை வேட்டியும் சட்டையுமாய்.
கொழ கொழ சகதிகளுக்கு நடுவே
நடை பயணம் நகைச்சுவை ஆனது.
வித்தைக்காரன் போல் தத்தித்தாவி
கடைவீதி சென்று திரும்பியாயிற்று
கஷ்டப்பட்டு.
வெற்றிக் களிப்புடன்
திரும்பி வந்தவனை
விரக்தியோடு பார்க்கிறாள்
விஷமக்கார வாழ்க்கைத் துணைவி.
வீட்டில் வேண்டுமளவும் இருக்க
மேலும் வாங்கிவரச் சொல்லி
எதற்காக விரட்டி அடித்தாளோ
என் காதல் மனைவி?
அப்போது புரியாதது
இப்போது புரிகிறது.
வெளியே....
ஊரே வெள்ளத்தில் அல்லாடிக் கொண்டிருக்க
உள்ளே....
அவள் அடுக்களையில் அல்லாடிக் கொண்டிருக்க,
கொஞ்சமும் வெட்கமின்றி
கொதிநீர் கேட்டு வாங்கி
கூல் ஆக குளித்து முடித்து
அயர்ன் செய்த வேட்டி சட்டை அணிந்து
நடு கூடத்தில் நச்சென வந்தமர்ந்து
சூடாக ஒரு காப்பி கேட்ட கோபத்தில்
இப்படிச் செய்திருக்கிறாள் அன்பான ராட்சசி.
"என்ன ஒரு வில்லத்தனம்?"
விரக்தியோடு பார்த்தவளை
விஷமப் புன்னகையுடன் நான் பார்க்க,
என்ன நினைத்தாளோ தெரியவில்லை
'வாய்யா பார்த்துக்கிறேன்" எனச் சொல்லி
வெட்கப் புன்னகையுடன்
வீட்டினுள் விரைந்தாள்.
குளிரில் விறைக்க வேண்டிய நான்
விரகத்தில் விரைத்தேன்.
கை நழுவிய வெங்காயம்
காணாமல் போயிற்று உருண்டோடி.
வயசான காலத்திலும்
வாய் முணு முணுத்தது:
"வாழ வைக்கும் காதலுக்கு ஜே".
விரகத்தில் துள்ளிக் கொண்டு உள்ளே விரைந்தவன்
வேட்டி நுனி தடுக்கி
தட்டுத் தடுமாறி தட்டென தரையில் வீழ்ந்தேன்.
வெட்கத்தோடு உள்ளே விரைந்தவள்
வெற்றியோடு திரும்பிப் பார்த்து
கல கலவென நகைத்தாள்.
"அடி கிராதகி...."
அவள் நகைப்பில் நானும் இணைந்தேன்
இன்னமும் செத்துப் போகாத
வீங்கிப்போன முட்டியை
வேட்டியால் மறைத்த படி.
வெட்கமெதற்கு?
நோகடித்தாலும்
நொங்கு கழட்டினாலும்
காதலுக்கு சொல்வோம்
எப்போதும் 'ஜே'.
Comments
Post a Comment