நிஜமும் நடிப்பும் ....நானும் நாமும்
இயல் இசை நாடகம் என
கலைகள் பல விதம்.
கலைகளின் ரசிகர்கள் பல விதம்
அதில் நான் ஒரு விதம்.
ரசிகர்களின் ரசனைகள் பல விதம்
அதில் எனது புது விதம்.
நீ பார்ப்பவை எல்லாம் படங்கள் அல்ல
விழிகள் சொல்கின்றன.
படங்களில் என்ன படிப்பது
பாடமா?
படிப்பினை இல்லாத படங்கள்
வெறும் வண்ணக் கலவையா?
வெறும் வண்ணக் கலவைக்கும்
என்னுள்ளம் உருகுவதேனோ?
நீ கேட்பவை எல்லாம் பாடல்கள் அல்ல
செவிகள் சொல்கின்றன.
பாடல்களில் என்ன பார்ப்பது
நுட்பமா?
நுட்பங்கள் இல்லாத பாடல்கள்
வெறும் ஓசைக் குலவியா?
வெறும் ஓசைக் குலவியிலும்
என்னுள்ளம் ஒன்றிக் குவிவது ஏனோ?
ரசிகர்கள் பல விதம்
நான் ஒரு விதம்.
ரசனைகள் பல விதம்
எனது புது விதம்.
பார்க்கும் அனைத்தையும்
பரிவுடன் பரிசீலிக்கிற,
கேட்கும் அனைத்தையும்
கனிவுடன் கவனிக்கிற
என்னுள்ளமே நான் எனில்
என்னை எனக்குப் பிடிக்கிறது.
என்னை எனக்குப் பிடிப்பதால்
விமர்சனங்கள் ஆயிரம் இருப்பினும்
எனக்குப் பிடிக்கிறது எப்போதும்
எல்லாமும் எல்லோரும்.
எல்லாமும் எல்லோரும்
எப்போதும் எனக்குப் பிடிப்பதால்
உள்ளுக்குள் பிடித்திருந்தும் வெளியில்
எவருக்கும் பிடிக்கவில்லை என்னை.
எல்லாமும் எல்லோரும்
எப்போதும் எனக்குப் பிடிப்பதில்
இவர்களுக்கு இத்தனை சிக்கலா?
அந்தோ பரிதாபம்.
எல்லோரையும் எனக்குப் பிடிப்பதால்
இவர்கள் சிக்கல் தீர்க்க
இனி எனக்குப் பிடிக்கப் போவதில்லை
எல்லாமும் எல்லோரும் வெளியே.
இனி நானும் ....
உள்ளே வேறு வெளியே வேறு.
வேஷம் கட்ட முடிவெனில்
வெளுத்துக் கட்ட வேண்டியது தானே?
என்ன விந்தை பாருங்களேன்
என் வேஷம் பிடிக்கிறதாம்
என் நிஜம் வெறுக்கும் எல்லோருக்கும்.
என் முகத்திலே மெல்லிய புன்னகை
என் அகத்திலோ வல்லிய வேதனை.
நிஜம் நேசிக்க மறுப்பவர்கள்
நடிப்பை நேசிக்கத் துடிக்கிறார்கள்.
இருப்பினும் பிடிக்கிறது எனக்கு
உள்ளேயும் வெளியேயும்
இரக்கத்தால் இவர்களை.
அன்பும் பண்பும்
இல்லாது போனாலும்
பரிவும் பாசமும்
பாழாய் போனாலும்
இரக்கம் இன்றியமையாதது
எனக்கும் நமக்கும்
நிஜமாயினும் நடிப்பாயினும்.
இனியோரே வாருங்கள்.....
நிஜத்திலும் நடிப்பிலும்
நானும் நாமும்
இரக்கத்தோடு வாழ்ந்து இறப்போம்.
Comments
Post a Comment