என் முகம்...உன் முகம் ...உன் முகம் ....என் முகம்


நான் நிஜத்தில் தொலைத்தது
உன் முகம்
நான் கனவில் தொலைத்தது
என் முகம்
கனவே கலையாதே.

கண்ணாடி காட்டுது
என் முகம்
அதன் பின்னாடி மறையுது
உன் முகம்
கண்ணாடியே  காணாமல் போ.

நான் மகிழ்ந்து இருக்கையில்
என் முகம்
நான் நெகிழ்ந்து இருக்கையில்
உன் முகம்
மகிழ்ச்சியே மறைந்து போ.

நான் ஊரோடு இருக்கையில்
என் முகம்
நான் தனித்து இருக்கையில்
உன் முகம்
ஊரே என்னை ஒதுக்கிவை.

நான் மனிதரில் பார்ப்பது
என் முகம்
நான் மலர்களில் பார்ப்பது
உன் முகம்
மனிதனே மலராகிப் போ.

இருளில் இருப்பது
என் முகம்
ஒளியில் ஒளிர்வது
உன் முகம்
இருளே இறந்து போ.

என் உயிரில் தெரிவது
உன் முகம்
என் உடலில் தெரிவது
என் முகம்
உடலே உயிரை விடு.

Comments

Popular posts from this blog

நிஜமும் நடிப்பும் ....நானும் நாமும்

சஹாரா பூக்கள் பூத்ததோ....

வாராயோ என் தோழி வாராயோ?