"நல்லதோர் வீணை செய்தே....."
"நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ"
நல்லதாக எனைச் செய்தே
புழுதியில் எறிவது போலே
இந்தப் புவியில் எறிந்தது ஏனோ?
"சொல்லடி சிவசக்தி
சுடர் மிகும் அறிவுடன் ஏன் என்னை படைத்தாய்"
சுடர் மிகும் அறிவுதான்
எனைத் தொட்டவன் சொல்கிறான்
வெகு சீக்கிரம் நான் சூடாவதாய்
மெழுகாய் இல்லை நான்
உருகி ஓடியதை
உருட்டித் திரியூட்டி
மீண்டும் எரியூட்ட.
எரிகிறேன் நான்
என் வெளிச்சத்தில் இல்லை
எவருக்கும் விடியல்
எனக்கே தவிர.
பஞ்சுப் பொதியாய் நான்
பற்றிப் பிடித்துக்கொள்கிறேன்
நீ எறியும் ஒவ்வொரு தீ குச்சியையும்
நடக்கையில் தெரியுது
நிழலில் நிழலாய் என் சாம்பல்
உடல் இருக்கையிலேயே
உயிரை எரிப்பது இதுதானோ?
புழுதியால் படைத்ததை புழுதியில்
எறிந்ததும் உன் இஷ்டம்
எறிந்ததை எரிப்பதும் உன் இஷ்டம்
உன் இஷ்டம் கொஞ்சம் என் கஷ்டம்
இருப்பினும் இல்லை
சிறு கஷ்டத்தில் பெரும் நஷ்டம்
புலம்பலை செய்கிறேன்
புளங்காஹிதத்தோடே
நீ புன்னகைப்பது புரிகிறது
என் சுடர் மிகும் அறிவுக்கு
"சொல்லடி சிவசக்தி
சுடர் மிகும் அறிவுடன் (ஏன்) என்னை படைத்தாய்"
Comments
Post a Comment