தொலைத்து தொலையாமல் போ.............

வலிக்கையில்
வலிக்கிறதென என்ன உளறல்?
வலி போக
வலியை வலிக்க விடு.

விழி தெரிய
விழியை விழிக்க விடு.

துயில் போக
துயிலை தூங்க விடு.

நித்தமும் நடக்குது
இரட்டை வாழ்க்கை
நீயா தூங்கி நீயா விழிக்கிறாய்?

நீ உண்மையறிய
உன்னை உறங்கச் செய்கிறேன்;
நீ பொய்யைத்  தொடர
உன்னை பிறக்கச் செய்கிறேன்.

இறக்கச் செய்து
உறங்கச் செய்கிறேன்;
உறங்கச் செய்து
பிறக்கச் செய்கிறேன்.

நித்தமும் நடக்குது
இரட்டை வாழ்க்கை
நீயா தூங்கி நீயா விழிக்கிறாய்?

செத்துப் பிழைத்து
செத்துப் பிழைத்தெனவே
இறப்பையும் பிறப்பையும்
இடுக்கிலே கட்டிக் கொண்டலைகிறாய்;

இதிலே
நான் நானெவே
எனது எனதெனவே
இனிமையில்லா இளிப்பெதற்கு?

உன்னை உனக்கு கொடுத்தது
என்னைத் தூக்கியெறிந்து
உன்னில் நீ உறைவதற்கல்ல
உன்னைத் தூக்கியெறிந்து
என்னில் நீ மறைவதற்கு.

தொலைந்து போ;
உன்னைத் தொலைத்து
என்னில் தொலைந்து போ.

என்னில் தொலைந்து
என்றும் தொலையாமல் போ.

எவன் சொன்னான்
என்னை நேசித்தாலே உன்னை நான் நேசிப்பேன் என்று?
அவனிடம் சொல்
நான் உன்னை நேசிப்பதாலேயே
நீ என்னை நேசிக்கிறாய் என்று;
நான் உன்னை நேசித்தாலே
நீ என்னை நேசிப்பாய்  என்றும்.

வலிக்கையில் என்ன உளறல்
வலிக்கிறதென?
வலி போக
வலியை வலிக்க விடு.

வழி தெரிய
விழியை விழிக்க விடு.

துயில் போக
துயிலை தூங்க விடு.

நித்தமும் நடக்குது
இரட்டை வாழ்க்கை
நீயா தூங்கி நீயா விழிக்கிறாய்?

Comments

Popular posts from this blog

நிஜமும் நடிப்பும் ....நானும் நாமும்

சஹாரா பூக்கள் பூத்ததோ....

வாராயோ என் தோழி வாராயோ?