நீயும் நானும் ......



பரந்த வானம் நீ
பால் நிலா நான்
தோன்றித் தேய்ந்து மறைந்து
தோன்றித் தேய்ந்து மறைந்தெனவே
உன்னுடனே
உனக்குள்ளே
உனதாலே
உனதிச்சைப்படியே.

மலர்ந்த மலர் நீ
மயங்கிய வண்டாய் நான்
உன் மீது
உனக்குள்ளே
உனையே சுற்றிச் சுற்றி
தேன் குடித்து மாளேன் நான்
தேன் குடித்தும் மீளேன் நான்.

தேகம் தொடும் தென்றல் நீ
நீ தொடும் தேகம் நான்
எனைத் தொடவே தென்றலாய் நீ
நீ தொடவே உன் தேகமாய் நான்.

எனைத் தாங்கித் தவழும் கருமேகம் நீ
நீ சுட்டிய இடத்தில் விரும்பிய வினாடியில்
உன்னிலிருந்து உனதால்
நம் மண்ணுயிர்க்குப்  பெய்யும் மாமழை நான்.

அலை புரளும் கடலாய் நீ
அந்தக்  கடலில் புரளும் அலையாய் நான்
கடலின்றி அலையேது
அலையின்றி கடலேது
நீயின்றி நான் ஏது
நானின்றி நீ ஏது
நாமின்றி நமதேது?

ஒளியாய் நீ.
அந்த ஒளியின் ஒளியாய்
உன்னிலிருந்து நான்.
எனைப் புகழ்ந்து உனை போற்றுகின்றார்
என் புகழுக்கு உரியவன் நீ என்பதாலே
நானே புகழ்வதும் நீயே என்பதாலே.

என்னைப் பார்த்தவர்
என்னில் மயங்கி 
உன்னில் நானாய் உறங்குவோர்
என்னைப் பார்க்கத் துடிப்பவர்
தன்னில் உறங்கி 
உன்னில் நானாய் விழிப்போர்.

உன்னை காட்ட உன்னிலிருந்து
என்னைப் படைத்த நீ
என் முன்னால் உன் முகம் காட்டியபடி;
உன்னை காட்ட என்னிலிருந்து
நீ படைத்த என் மக்கள் முன்னால்
நான் உன் குணம் காட்டியபடி.

Comments

Popular posts from this blog

நிஜமும் நடிப்பும் ....நானும் நாமும்

சஹாரா பூக்கள் பூத்ததோ....

வாராயோ என் தோழி வாராயோ?