ஆணும், பெண்ணும்....இறைவனும்

அன்று......
கம்பீரமான ஒரு ஆணையும்
கலக்கலான ஒரு பெண்ணையும் பார்க்கையிலே
உள்ளத்தில் ஏக்கம் வந்தது.
 
கற்பனையில் கம்பீரம் கொண்டதும்
கலக்கலான பெண்ணை கயமையால் களவாட
அதே கற்பனையில் மனம் இராவண புத்தி போதித்தது;
படைப்பில் கவனம் நிலைத்து
படைப்பவனை உள்ளம் உதாசீனம் செய்தது.  

இன்று....
கம்பீரமான ஒரு ஆணையும்
கலக்கலான ஒரு பெண்ணையும் பார்க்கையிலே
உள்ளுக்குள் கை குவித்து, நெற்றி நிலத்திலே பட 
அடடே இன்னா மஜாவான ஆளுப்பா நீ என
கம்பீரத்தை ஆணிலும் கலக்கலை பெண்ணிலும்
படைத்தவனின் படைப்பாற்றலை
உள்ளம் பாராட்டி பரிதவிக்கிறது;
படைப்பின் மீதான கவனம் சிதைந்து
படைப்பவனின் மீதே உள்ளம் நிலைக்கிறது;  
படைப்பவனை பற்றியே சிந்தனை நீள்கிறது.

ஆண் அவன் ஆணவம் அல்ல;
பெண் அவள் பேதமை அல்ல;
ஆண் அவன் ஆண்டவனின் ஆளுமை;
பெண் அவள் ஆண்டவனின் மேன்மை.

என்னையும் என் போன்ற உங்களையும் காண்கையில்
நான் ஆண்டவனின் ஆளுமை உணருகிறேன்;  
என்னவளையும் என் அவள் போன்ற பெண்களையும் காண்கையிலே
நான் ஆண்டவனின் மேன்மை உணருகிறேன்.  

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பர்
வெயில் தன் அருமை அதன் நிழலில் அறியும் என்கிறேன் நான்
 
ஆண் கம்பீரமான வெயில் எனவும்  
பெண் குளுமையான நிழல்  எனவும் கொண்டால்
ஆண் அவன் தன் கம்பீரம் உணருவதே
பெண் அவளின் குளுமை நிழலில் தானே?
  
ஆனால், என்ன விந்தை பாருங்களேன் 
வெயில் இன்றி நிழல் ஏது? நான் இன்றி அவள் ஏது?
அவள் இன்றி நிழல் ஏது? நிழல் இன்றி நான் ஏது?
நான் என் அருமை அறிவதும் ஏது?
நான் அவள் அருமை புரிவதும் ஏது? 

ஆணுக்கு அவனை அறிதலும், 
அவனின் அவளை அறிதலும் முக்கியம்.
பெண்ணுக்கு அவன் அவளை அறிதல் மட்டும்தானே முக்கியம்?

ஆண்டவனுக்கு நாம் அவனை அறிவது மட்டும்தானே அவசியமாய் இருக்கிறது
ஆண்டவன் ஆணா, பெண்ணா?
பெண்ணாகத்தான் இருக்க வேண்டுமோ?!
ஆணுக்கு தன் உடலைத் தந்த ஆண்டவன்
பெண்ணுக்கு தன் உள்ளத்தை தந்தது ஏனோ?
உடல் இன்றி உள்ளம் ஏது? 
உள்ளம் இன்றி உடல் எதற்கு?
நான் இன்றி அவள் ஏது? 
அவள் இன்றி நான் எதற்கு?

நேற்றைய கேள்விகள் இன்றும்
இன்றைய கேள்விகள் நாளையும் என்றால்
நாளை மறுநாளும் நான் வாழ்ந்து பயனேது?
நான் இருப்பினும், இறப்பினும்
நாம் இருப்பினும், இறப்பினும்
ஆணும், பெண்ணும் உள்ளமட்டும்
ஆணிலும் பெண்ணிலும் எப்போதும் வாழும் கேள்வி இது

படைப்புக்களை உற்றுப் பார்க்கையிலே
படைத்தவன் மெல்லப்புரிகிறான்.
புரிதல் மிகுகையிலே
பகிர்தல் குறைகிறது.
இந்த கேள்விக்கும் எந்த கேள்விக்கும்
புன்னகையே பதிலாகிப்போகிறது பெரும்பாலும்.


Comments

Popular posts from this blog

நிஜமும் நடிப்பும் ....நானும் நாமும்

சஹாரா பூக்கள் பூத்ததோ....

வாராயோ என் தோழி வாராயோ?