எங்கே அவள் .....என்றே மனம்....
காற்றிலே கலந்து அதன் போக்கிலே
ஓடும் காகிதம் போலவே
காலத்தின் ஓட்டத்திலே
காணாமல் போனவன் நான் அல்ல.
கல்லாய் ஓரிடத்திலே
கணமாய் காத்திருக்கிறேன்
எத்தனை புயல், எத்தனை வெள்ளம்
ஏதும் என்னை அசைத்தபாடில்லை;
என்னுள்ளே எனக்காய் நீ விட்டுசென்ற
உன் நினைவலைகள் எந்தக் கணமும்
என்னை நீங்கியபாடில்லை.
உன்னை விட்டும் என்னை எடுத்து
எங்கு சென்றாயோ நீ?
நீ விட்டுச் சென்ற உன்னில்
நான் எனை காண்பது போலவே
நீ எடுத்துச் சென்ற என்னில்
உனை காண்பாயோ நீ?
காகிதமாய் காற்றிலே மிதந்து
உன்னில் கலந்த என்னைத் தேடி அலையாமல்
கல்லாய் கணமாய் ஓரிடத்திலே
காத்திருந்து நான் கண்டதென்ன?
காதலே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பையடா
குத்திவிடத் தேவையில்லை.
தானாய் கிழியும் பை,
காணாது போகும் காற்று.
காதலே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பையடா.
Comments
Post a Comment