அன்பே சிவம் ......இறை நேசம்
இறை நேசம்.....கற்பனை நண்பருடன் என்னுடைய உரையாடலும் அதற்கான என்னுடைய தொடர் விளக்கமும்:
நண்பர்: இறை நேசம் என்றால் என்ன?
நான்: இறை நேசம் என்றால் உங்களுடைய நேசத்தில் எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் எல்லோரையும் நேசிப்பது
நண்பர்: எல்லோரையும் எப்படி வேறுபாடு இல்லாமல் நேசிக்க முடியும்?
நான்: எல்லோரையும் எந்த வேறுபாடும் இல்லாமல் நேசிக்க முடிவதனால்தான் அதை இறை நேசம் என்கிறோம். இறைவன் அப்படிதானே நம்முடைய எல்லோருடைய குறைகளையும் மீறி நம் எல்லோரையும் ஒரே மாதிரியாக நேசிக்கிறான்
நண்பர்: இறை நேசம் எனக்கு இருக்கிறது என்பதை நான் எப்படி அறிவது?
நான்: என்றைக்கு உங்களிடம் இருக்கும் குறைகளை மறந்து உங்களை உங்களால் நேசிக்க முடிகிறதோ, என்றைக்கு உங்களின் வாழ்க்கையில் இருப்பவர்களின் குறைகளை மறந்து அவர்களையும் நீங்கள் உங்களை நேசிக்கும் அளவிற்கு நேசிக்க முடிகிறதோ அப்போது உங்களுக்கு இறை நேச குணம் இருப்பதாக கொள்ளலாம்
நண்பர்: குறைகள் இருக்கும் என்னிடம் இறை நேசம் வர முடியுமா?
நான்: இறை நேசம் வந்துவிட்டால் குறைகள் குறைந்து, குறைந்து ஒரு நாளில் குறைகளே இல்லாதவராகி விடுவீர்கள். குறைகளே இல்லாத நிலை அடைய முயற்சிப்பவர்களுக்கும் இறை நேச குணம் வருதல் அவசியம்
நண்பர்: இறை நேச குணம் வர நான் என்ன செய்ய வேண்டும்?
நான்: இறை நேசம் என்னவென்பதை அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அந்த முயற்சியில் இறை நேசம் என்ன என்பதை உணர்வீர்கள் ....அந்த உணர்வு பூர்வமான அறிவு வந்துவிட்டால் இறை நேச குணம் உங்களிடமும் வந்து விடும்
நண்பர் (கவலையோடும், குழப்பத்தோடும்): இறைவன் நேசம் மிகுந்தவன் என்கிறீர்கள். ஆனால் நேசம் மிகுந்த இறைவன் கோபம் மிகுந்தவனாகவும் இருக்கிறானே ......கடும் மழை, புயல், வெள்ளம், கடல் கொந்தளிப்பு, பூமி அதிர்ச்சி, எரிமலை கொதிப்பு இவற்றை இறைவனின் கோபத்திற்கு அடையாளமாக கூறுகிறார்களே?
நான்: அவை இறைவனின் கோபத்தின் அடையாளங்கள் அல்ல. அவை இறைவனின் நேசத்தின் அடையாளங்கள் ....தவறு செய்யும் குழந்தையை கோபம் கொள்வது போல நடித்து கண்டிக்கும் தாயின் குணம் கோபத்தின் அடையாளம் அல்ல. அது அந்த குழந்தையின் மீது அந்த தாய்க்கு இருக்கும் அன்பின் அடையாளம். அதை போன்றதே இதுவும்
நண்பர் (சிறிது நேரம் சிந்தனையில் இருந்தவர் கண்கள் மலர என்னை பார்த்து): ஏதோ புரிவது போல இருக்கிறது
நான்: ஏதோ புரிவது போல இருப்பதுதான் எல்லாம் புரிவதற்கு ஆரம்பம். இந்த ஆரம்பத்தை இறுக பிடித்துக்கொள்ளுங்கள். விரைவில் எல்லாம் புரிய ஆரம்பிக்கும். எல்லாம் புரிய, புரிய இறை நேசம் புரியும். இறை நேசம் புரிய, புரிய, இறை நேசம் உணர, உணர இறை நேச குணம் உங்களிடமும் மலரும். போய் வாருங்கள்.
இப்படி சொல்லி நண்பரை அனுப்பி விட்டு, கைகளை தலைக்கு கொடுத்து, தாயின் கருப்பைக்குள் கிடக்கும் குழந்தை போல உடலை சுருக்கி படுத்தவன் "லப்...டப்...லப்...டப்..." என்ற இதயத்தின் தாலாட்டில் கண் மூடினேன். மூடிய கண்களுக்குள் இருளுக்கு பதிலாக பிரகாசமான ஒளியாக இறைவன் தெரிந்தான். இறைவனின் ஒளியில் தாயின் மடிமீது தலை வைத்து தூங்கும் போது தோன்றும் இதமான உணர்ச்சி இதயத்தில் தோன்றியது. இப்படி உணர்ந்தவர் எவரோ தான் "ஆதி பகவன்" என்று சொல்லிவிட்டார் போலும்.
ஒளியே இறைவன் அல்ல. ஒளியும் இறைவன். அதாவது sun is not God. But, sun is also God......"also " என்றால் வேறு எதெல்லாம் God என்று கேள்வி வரும். அது நியாயமே. அந்த கேள்விக்கு வேறு பல விஷயங்கள் are also God என்கிற பதில் கிடைக்கும். அந்த வேறு பல விஷயங்கள் என்ன என்று யோசிக்கும் போது அந்த யோசனையின் விளைவாக whatever else look like God are not God ....actually they are all God's என்கிற பதில் கிடைக்கும். அதாவது நீங்கள் என் நண்பர் என்றால் உங்களை பொறுத்தவரை நான் என்பவன் உங்களின் நண்பன். ஆனால் நான் என்பவன் உங்கள் நண்பன் மட்டுமா என்றால் நிச்சயம் இல்லை. நான் என்பவன் உங்களுக்கு உங்கள் நண்பன், என் பெற்றோர்களுக்கு பிள்ளை. என் மனைவிக்கு கணவன். என் பிள்ளைகளுக்கு தகப்பன். இவையெல்லாம் என்னுடைய பல குணாதிசயங்கள். என்னுடைய பல வெளிப்பாடுகள். ஆனால் நான் என்பது தனி. "I" is a distinct entity. Similarly, God is a distinct entity and everything else is God's .....அதாவது இறைவன் என்பது வேறு. அவனுடைய நிலைப்பாடுகள், அவனுடைய குணாதிசயங்கள் என்பது வேறு.
இறைவனுடைய வெளிப்பாடுகளை, அவனுடைய குணாதிசயங்களை கூர்ந்து கவனிக்கும் போதே அவை வெளிப்படும் இடமான இறைவனை அறியமுடியும். இறைவனுடைய வெளிப்பாடுகள் மூலமாக, இறைவனுடைய குணாதிசயங்கள் மூலமாக இறைவனை அறியுங்கள். ஆனால் இறைவனுடைய வெளிப்பாடுகளே, இறைவனுடைய குணாதிசயங்களே இறைவன் என்பதாக கருதி அத்துடன் நின்று விடாதீர்கள். இந்த உலகில் நீங்கள் காணும் பல கடவுள் உருவங்கள் கடவுளின் பல குணங்களை உங்களுக்கு புரியவைப்பதற்க்கான ஒரு முயற்சியே தவிர அவையே கடவுள்கள் என்று உங்களை நம்ப வைப்பதற்கான ஒரு முயற்சி அல்ல. இறைவனுடைய குணங்களை அறிந்துகொள்ளும் முயற்சி என்பது இறைத்தன்மை கொண்டு இறைவனோடு கலக்கும் முயற்சியின் பல நிலைகளில் முதல் நிலை. அந்த முதல் நிலையில் நம்மை வெற்றி பெறவைக்கும் ஒரு உன்னத முயற்சியே இறைவனுடைய பல குணங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த பல உருவங்கள். அந்த முதல் நிலையிலே நின்று விடுவது வெற்றி அல்ல. அடுத்த நிலைக்கு போவதே உண்மையான வெற்றி.
அந்த முதல் நிலையிலே நின்று விடுவோமானால் அது நம்முடைய தவறே தவிர முன்னோர்கள் தவறல்ல. முதல் நிலை வகுப்புகளில் எப்படி குழந்தைகளுக்கு அதிகம் அதிகம் உருவங்கள் சார்ந்து கல்வி போதிக்கப் படுகிறதோ அதை போன்றதே முதல் நிலையில் இறைவனுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் இந்த உருவங்களும். எப்படி குழந்தைகள் உருவங்கள் மூலமாக கற்றுக்கொண்ட பாடங்களை உருவங்கள் அற்ற அடுத்த நிலைகளுக்கு எடுத்துச் செல்கின்றனவோ அதை போல நாமும் உருவங்கள் மூலமாக அறிந்து கொண்ட இறைவனைக் கொண்டு அடுத்த நிலையான உணர்வு பூர்வமாக இறைவனை உணரும் நிலைக்குச் செல்ல வேண்டும்.
உணர்வு பூர்வமாக இறைவனை உணரும் அடுத்த நிலையில் உருவங்கள் தேவைப் படுவதில்லை. இறுதியாக உருவங்களும் தேவை அற்ற, உணர்வுகளும் தேவை அற்ற நிலைக்குச் செல்லும் போது நாம் இறைவனிடம் ஐக்கியமாக ஆகி விடுகிறோம். அதாவது "சித்தி"....அல்லது...."முக்தி" அடைந்து விடுகிறோம். இறைவனோடு ஐக்கியமாகும் நிலையை நாமே இறைவனாகி விட்டதாக கொள்வதும் தவறு. கடலோடு கலக்கும் நதி கடலின் பெயரையும், கடலின் தன்மையையும் பெரும் போதிலும் கடல் என்று ஒன்று இருந்தது என்பதை மறந்து விடக் கூடாது. அதுபோல இறைவனோடு ஐக்கியமாகிவிட்ட நிலையில் நாமும் இறைத்தன்மை பெற்றுவிடுகிறோமே தவிர நாமே இறைவன் என்று சொல்லி விட முடியாது.
கடல் என்று ஒன்று எப்போதும் இருந்ததை போலவும், அதிலிருந்து தோன்றிய மழை நீர் நதியாக ஓடி, அது எங்கிருந்து தோன்றியதோ அங்கேயே சென்று கலப்பதை போலவும், இறைவனிலிருந்து தோன்றிய நாம் மனிதர்களாக வாழ்ந்து (அதாவது நதியாக ஓடி), பின்னர் எங்கிருந்து தோன்றினோமோ அங்கேயே சென்று கலந்து விடும் நிலைதான் இறுதி நிலை. உணர்வுப்பூர்வமாக இறைவனை உணரும் நிலையில் நம்மிடம் இருந்தும் அந்த இறை உணர்வுகள் வெளிப்பட ஆரம்பிக்கும். அதுவே மேலே உள்ள உரையாடலில் கற்பனை நண்பர் கேட்ட "இறை நேசம்". இந்த இரண்டாம் நிலையில் இருக்கும் போதே மூன்றாம் நிலையான இறைவனோடு கலக்கும் நிலையும் ஆரம்பம் ஆகிவிடுகிறது. இறைவனோடு கலக்கும் நிலை என்பது முடிவு. அதாவது மரணம். அதாவது உயிருக்கு / ஆத்மாவிற்கு இனி உடல் தேவைபடாத நிலையே மரணம்/முக்தி /சித்தி......
உணர்வு பூர்வமாக இறைவனை உணரும் அந்த இரண்டாம் நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக மனிதன் தன்னுடைய காமம், கோபம், விருப்பு, வெறுப்பு என மற்றைய ஆதார உணர்வுகளையெல்லாம் உதிர்த்து இறைவனின் ஒரே குணமான அன்பை மட்டுமே பற்றி பிடித்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் தான் "அன்பே சிவம்" என்று சொல்ல முடியும். ஏனைய உணர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக உதற முடியாதவன் இரண்டாம் நிலையிலேயே இருந்து விடுகிறான். அவனால் மூன்றாம் நிலைக்கு முன்னேறி செல்ல முடிவதில்லை. அன்பே சிவம் என்று புரிந்து கொண்டு அதே நிலையிலேயே இருப்பதற்காகவே இந்த இரண்டாம் நிலையில் பலர் மற்ற உணர்வுகளை தூண்டும் சக மனிதர்களை தவிர்த்து அன்பையும், இனிமையையும் மட்டுமே தூண்ட கூடிய இயற்கையான சூழ்நிலைகளை தேடி செல்கிறார்கள். இமயத்திற்கு போவதும், காட்டினிலே சென்று இறைவனை நினைத்து தவம் செய்வதும் ஏனைய உணர்வுகளை தவிர்த்து அன்பை மட்டுமே பற்றி பிடித்துக்கொள்ள செய்யும் ஒரு முயற்சியே. அந்த முயற்சியில் வெற்றி பெற்றவர்களே திரும்பவும் மனிதர்கள் வாழும் இடங்களுக்கு வருகிறார்கள்.
அந்த முயற்சியில் தோற்றுப் போகிறவர்கள் மீண்டும், மீண்டும் வெற்றி பெற முயற்சி செய்தவர்களாய் அங்கேயே நீண்ட வாழ்வு வாழ்ந்து மடிகிறார்கள். சரி....புத்தன், இயேசு, ராமன், முகமது என அன்பை மட்டுமே பற்றி பிடித்துக் கொண்டவர்கள் ஏன் திரும்பவும் மனிதர்களைத் தேடி வரவேண்டும்?
எப்படி அன்பை மட்டுமே தன்னுடைய முதற் குணமாக கொண்ட இறைவன் தன்னுடைய அன்பை காட்டுவதற்காக மனிதனை படைத்து, அவன் மீது தன்னுடைய அன்பை பொழிவதை மட்டுமே செய்து வருகிறானோ அதை போலவே செய்யும் போதுதானே அந்த இறைவனோடு கலந்து அந்த இறைத்தன்மை பெறவும் முடியும். அதனாலேயே அன்பை மட்டுமே பற்றி பிடித்துக்கொண்டவர்களும் அந்த இறை நேசத்தை காட்டுவதற்காக மற்ற மனிதர்களை தேடி வருகிறார்கள். அதாவது முக்தி/சித்தி என்கிற நிலையை அடைவதற்காக.
சக மனிதர்கள் இல்லாமல் அவர்களும் முக்தி/சித்தி அடைந்திருக்கவே முடியாது என்பதை இங்கே அறிந்து கொள்ளுங்கள். அதனால் இறை நேசம் வரப் பெற்றவர்களே, இறை நேசம் கொண்டவர்களே முக்தி அடையவும், சித்தி அடையவும் சக மனிதர்களை அந்த இறை அன்போடு நேசியுங்கள். இந்த கட்டம் உங்களுக்கு இறைவன் தரும் சோதனை. அந்த சோதனையில் வெற்றி பெறுபவர்களை மட்டுமே இறைவன் தன்னோடு, தனக்குள் சேர்த்துக்கொள்வான் என்று தோன்றுகிறது. எப்படி நம்மை போன்ற குணமுடையவர்களையே நாம் நமக்கு நெருக்கமாக ஆக்கிகொள்கிறோமோ அதைப் போலவே.
ஆக, நாம் சரியாகச் செய்யும் ஒவ்வொரு விசயத்திலும் இறை தன்மை வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். இதை, தான் செய்யும் ஒவ்வொரு விசயத்தையும் கூர்ந்து கவனிக்கும் இயல்புடையவர்களே அறிய முடியும். எனவே உங்களுடைய ஒவ்வொரு செயலையும் நீங்களே கூர்ந்து கவனியுங்கள். தவறு செய்தால் திருத்திக் கொள்ளுங்கள். தவறு செய்யும் போது அதை சுட்டிக் காட்டுபவர்களை உங்களுக்கு நெருக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள். அவர்கள்தான் உங்களை சரியான விசயங்களை மட்டுமே செய்யத் தூண்டும் முக்கியமான கருவிகளில் ஒன்று.
அதற்காகவே இறைவன் இவ்வுலகில் தந்தை, தாய், சகோதரி, சகோதரன், நண்பன், மனைவி/கணவன், குழந்தைகள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என பல உறவுகளை தந்திருக்கிறான். இவர்கள் அனைவரும் உங்களை சரியான விசயங்களை சிந்திக்கத் தூண்டும், சரியான விசயங்களை செய்யத் தூண்டும் நல்ல கருவிகள்.
அப்படியே நீங்களும் அவர்களுக்கு நல்ல கருவியாக இருத்தல் அவசியம். ஏனென்றால் நல்ல விசயங்களை, சரியான படி செய்யும் போதுதான், செய்யத் தூண்டும் போதுதான் இறைவனைப் புரிந்து கொள்ளவும், இறைவனை உணரவும் முடியும். இப்படி நல்ல விசயங்களை, சரியான படி செய்யத் தூண்டும் இந்த உறவுகள் என்ற கருவிகளை நல்ல படியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அப்படியே உங்களையும் அவர்கள் நல்ல கருவியாக பயன்படுத்திக் கொள்ள அனுமதியுங்கள், ஒத்துழையுங்கள்.
தவறு செய்வதுதான் மனித இயல்பு. தவறே எப்போதும் செய்து கொண்டிருப்பது மனித இயல்பு அல்ல. செய்த தவறுகளை புரிந்து, உணர்ந்து திருத்திக் கொள்வதும், தேவை இருக்குமானால் செய்த தவறுகளுக்காக வருத்தப்படுவதும், மன்னிப்புக் கோருவதுமே நல்ல மனிதனின் இயல்பு என்பதையும் இந்த முதல் நிலையில் அறிந்து கொள்ளுங்கள்.....
அன்பே சிவம் என்கிற இரண்டாம் நிலைக்கு சென்ற பிறகு இப்படி நல்லதொரு கருவியாக இருந்த இந்த உறவுகளிலேயே எவரேனும் உங்களிடம் ஏற்ப்பட்டிருக்கும் மாற்றத்தை புரிந்து கொள்ள முடியாமல் உங்களுக்கு இடையூறாக, தொந்தரவு செய்பவர்களாக, எதிரிகளாக மாறக் கூடும். ஆனால், அவர்களையும் உங்கள் அன்பைக் கொண்டும், அன்பிற்காகவும், அன்போடு மன்னித்து அணைத்துக் கொள்ளுங்கள்.....அல்லது....அன்போடு தவிர்த்துக் கொள்ளுங்கள். அது நன்றி மறக்கும் செயல் அல்ல. அன்பினால் அன்பிற்காக அன்பை மறுப்பதும் கூட அன்பான செயல்தான்.
அதனால், அப்படி ஒரு சூழ்நிலை வருமானால், எந்தக் குழப்பமும் வேண்டாம். எந்தத் தடுமாற்றமும் வேண்டாம். எல்லோரிடமும் சமான அன்பு காட்ட நினைக்கும் உங்கள் நிலை உங்கள் உறவுகள் எவருக்கும் தவறாகத் தோன்றாமல் இருக்கவும், அந்தத் தவறான புரிதலினால் அவர்கள் ஏதும் குழப்பங்கள் ஏற்ப்படுத்தாமல் இருக்கவும் இறைவனைப் பற்றிய உங்கள் புரிதலும், இறை நேசம் என்கிற அந்த இறை குணமும் உதவி செய்யும் என்று நம்புங்கள். எல்லோரிடமும் நீங்கள் காட்டும் அந்த அன்பினில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அந்த அன்பு உண்மையானது , தூய்மையானது என்பதை அவர்கள் உணரும் போது அவர்களும் உங்களின் அன்பினை வேண்டி, உங்களைத் தேடி வரக்கூடும். அப்படி அவர்கள் வரும் போது நீங்களும் அவர்களை அன்போடு ஏற்றுக் கொள்வீர்கள். ஆகையால் கவலை வேண்டாம், குழப்பமும் வேண்டாம்....
அன்பே சிவம் என்கிற இந்த இரண்டாம் நிலை என்பது எல்லோரையும் தேடிச் சென்று அன்பு செலுத்துவது என்பது இல்லை. உங்களைத் தேடி வரும் எல்லோரிடமும் நீங்கள் அன்பு செலுத்துவதும், உங்கள் அன்பினை வேண்டி இருப்பவர்களுக்கும், உங்கள் அன்பு இவர்களுக்கு தேவை என்று எவர்களைப் பற்றி உங்களுக்குத் தோன்றுகிறதோ அவர்களை தேடிச் சென்று உங்களுடைய அன்பினை கொடுப்பதும் (அவர்களால் உங்களை தேடி வரமுடியாத நிலை இருப்பதை நீங்களே உணர்வீர்கள்) ஆகிய இவையே இந்த இரண்டாம் நிலை. எப்படி இறைவன் தன்னை தேடி வருபவர்களிடம் அன்பு காட்ட தவருவதில்லையோ அதை போன்ற விஷயம் இது .....எப்படி இறைவன் தன்னுடைய அன்பு தேவைப் படுவதை அறிந்து அந்த பக்தனை தேடிச் சென்று அவனுக்கு தன்னுடைய அன்பைத் தருகிறானோ அதைப் போன்றது இது....
இரண்டாம் நிலையில் இருக்கும் போது உங்கள் தலையைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் தெரிய வேண்டிய அவசியமோ, உங்கள் அழகிய முகத்தில் ஒளிப்பிரகாசம் தெரிய வேண்டிய அவசியமோ இல்லை. இருப்பினும், உங்கள் இதயம் அன்பின் வசம் இருக்கும்போது, நீங்கள் அன்பே உருவாக இருக்கும் போது உங்களையும் அறியாமல் உங்கள் முகம் பிரகாசமாக ஜொலிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். அப்படி இல்லாது போனாலும் அதற்காக கவலை கொள்ளாதீர்கள். இரண்டாம் நிலையில் இருக்கும் போது இப்படிப் பட்ட எதிர்பார்ப்புகளோ, கவலைகளோ உங்களுக்கு வருவதற்கும் வாய்ப்பு இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரை எந்த நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள உதவி செய்யுமானால் அது இறைவனின் விருப்பம். மாறாக, இந்தக் கட்டுரை உங்களுக்கு எந்த விதத்திலும் உபயோகப்படாது போனாலோ.....அல்லது உங்களை அலுப்படையச் செய்யுமானாலோ அதுவும் இறைவனின் விருப்பமே என்பதை விட என்னுடைய தவறாகவே நான் கருதுவேன்.
என்னுடைய அத்தகைய தவறுக்கு மன்னியுங்கள். என்னுடைய அத்தகைய தவறுகளை மறந்திடுங்கள்.
"என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று பெரியவர் கூறி இருப்பதைப் போல, என் கடன் இந்தக் கட்டுரையையும், இதே போல பல கட்டுரைகளையும் எழுதுவதும், அதை உங்களோடு பகிர்ந்து கொள்வதுமே.
இந்தக் கட்டுரை உங்களுக்குள் சில கேள்விகளை ஏற்ப்படுத்தி இருக்குமானால், அந்தக் கேள்விகளை என்னிடம் கேட்க உங்களுக்கு விருப்பமும், எண்ணமும் இருக்குமானால் கேளுங்கள். எனக்கு பதில் தெரிந்தால் கூறுகிறேன். இல்லையென்றால் உங்களோடு சேர்ந்து நானும் உங்களுடைய கேள்விகளுக்கு பதில் அறிய முயற்சிக்கிறேன்.
என்னுடைய எழுதும் பணியும், எழுதும் விசயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ளும் பணியும் நிறுத்தப்படும் வரை,
என்றும் அன்புடன்,
உங்களின் நான்.
(மகனாக, மருமகனாக, உடன் பிறந்த சகோதரனாக, உடன் பிறவா சகோதரனாக, கணவனாக, தகப்பனாக மற்றும் நண்பனாக)
Comments
Post a Comment