காதல் ............


நேற்று.....
இல்லாத ஒன்று நமக்கெதற்கு என்று 
காசுக்காக காதல் பற்றி எழுதிய 
காகிதப் பதிவை கசக்கி எறிந்து விட்டேன் 

இன்று.........
எதைப் பற்றியோ 
எத்தனையோ முறை 
எழுத முயற்சித்தும் 
எதையும் எழுத முடியாமல் 
கசக்கி எறிந்த காகித குப்பைக்கு நடுவே 
கசங்காத புன்னகையுடன் நான். 

என்னைப்போலவே சோம்பேறியாய் 
விலகிப்போகவே விருப்பமில்லாமல் 
என்னையும் இரவையும் சேர்த்துப் போர்த்தி இருந்த 
பனிப் போர்வை கலைந்து கொண்டிருந்த 
இன்றைய காலைப் பொழுதில்
இந்த விபத்து எனக்கு நேர்ந்தது.

விபத்திற்கு காரணம்..................

வந்தது தெரிந்திருந்தும் 
வரவே வராதது போல காட்டிக் கொள்ள வைக்கிற; 
இருப்பது உண்மையாய் இருந்தும் 
இல்லவே இல்லாது போல அலட்டிக் கொள்ள செய்கிற; 
உண்மையாய், மென்மையாய் 
வெள்ளையாய் சிரிக்க வைக்கிற; 
சமயத்தில் ஏனோ 
காரணமே இல்லாமல் கண்கலங்க வைக்கிற; 
உள்ளத்தில் ஓராயிரம் இருந்தும் 
இயல்புக்கு மாறாக 
எதையுமே எழுத்தில் வடிக்க முடியாமல் 
காகிதம் காகிதமாய் கசக்கி எறிய வைக்கிற 

கா    த    ல் தானய்யா அது.

Comments

Popular posts from this blog

நிஜமும் நடிப்பும் ....நானும் நாமும்

சஹாரா பூக்கள் பூத்ததோ....

வாராயோ என் தோழி வாராயோ?