உயிரற்ற உடலும் உடலில்லா உயிரும்......





விடிகாலை சூரியனின் வெளிச்சத்திலே 
வெள்ளை துணி போர்த்திய
உயிரற்ற என் உடலை 
என் உயிர் மட்டும் பார்க்கையிலே ..........

எத்தனை ஆசைகள்
எத்தனை அபத்தங்கள் 
எத்தனை தேவைகள்
எத்தனை தேடல்கள் 
எத்தனை கேள்விகள்
எத்தனை கேலிகள்
எத்தனை வியாக்கியானங்கள்
எத்தனை விவாதங்கள்
எத்தனை குதர்க்கங்கள்
எத்தனை குழப்பங்கள் என
அத்தனையும் காணாமற்போன
அன்றைய அதிகாலை நேரமே
என் உடலுக்கும், உயிருக்கும் பிடித்த நேரம். 

"தூக்கத்திலேயே உயிர் போயிருக்கு பா, நல்ல சாவுதான்" என 
இரு இதழ்கள் ஒரு செவியில் 
சொன்னது கேட்டும் 
"உஷ்....என்ன பேச்சு இது" என 
செவிகளுக்கு சொந்தக்காரர் 
இதழ்களுக்கு உரிமையானவரை 
கண்டிப்பது போல பாராட்டியது கண்டும் 
புன்முறுவல் பூத்தது என் உயிர்.  

அதிர்ந்து போயிருந்த 
என் மனையாளுக்கு ஆறுதல் தரும் வகையில் 
அவளை இருபுறமிருந்தும் அணைத்திருந்த 
கலங்கி போயிருந்த என் அன்பு மகள்களை கண்டபோது 
என் உயிருக்கு வலித்தது 
உடலை தேடி ஓடவும் உயிர் துடித்தது. 

அந்த மார்கழி மாத காலைப் பொழுதில் 
பக்கத்துக்குத் தெரு சிவன் கோவிலில் 
"சேர்க்க முடியாதது எதுவோ?"
தருமி கேட்கிறார் சிவனிடம் 
நகைக்கும் சிவ பெருமான் 
நகைத்த பின் சொல்கிறார் 
"உயிரும், உயிர் பிரிந்த உடலும்" என்று. 

உடலையும், உலகையும் பிரிந்த உயிர் 
உலக பந்தங்களை பிரிய முடியாமல் 
தவித்துத் துடிக்கிறது தனிமையிலே; 
உயிரைப் பிரிந்த உடலோ 
சலனமின்றி சமத்தாய் கிடக்கிறது பெருங்கூட்டதிலே. 



Comments

Popular posts from this blog

நிஜமும் நடிப்பும் ....நானும் நாமும்

சஹாரா பூக்கள் பூத்ததோ....

வாராயோ என் தோழி வாராயோ?