அன்பென்றால் என்ன அப்பா?
அப்பா....அப்பா...அன்பென்றால் என்ன அப்பா?
அர்த்தமுள்ள இந்தக் கேள்வியை கேட்டு விட்டு
பதிலுக்கு காத்திராமல் கல கலவென சிரித்து
என்னை கட்டி அணைத்து முத்தமிட்டு
விளையாட ஓடிப் போனாள் என் மகள்.
அவள் கேள்வி கேட்டதும்
கேட்ட கேள்விக்கு பதிலே எதிர்பாராமல்
கல கலவென சிரித்ததும்
என்னை கட்டி அணைத்ததும்
அணைத்துப் பின் முத்தமிட்டு ஓடி மறைந்ததும்
அவள் முத்தத்தின் எச்சில்
என் முகத்தில் காயும் முன்
அன்பென்றால் என்னவென்று
எனக்கு அழகாய் புரிய வைத்தது.
சப்பணமிட்டு அமர்ந்த நான்
கைககளை நீட்டியவாறே காத்திருந்தேன்
அவள் அணைப்பிற்கும்
என் இன்னொரு கன்னத்தில்
அவள் முத்தத்தின் எச்சிலுக்கும்.
விளையாட்டில் ஏதோ விபரீதம் போலிருக்கிறது
அழுதவாறே வந்த அவள்
நீட்டிய என் கைகளை பார்த்து
வினாடிகள் சில யோசித்தாள்
பின் பூவாய் முகம் மலர்ந்தவள்
பட்டம் பூச்சி போலவும் பறந்தே வந்தாள்
நீட்டிய என் கைகளுக்குள் சிறை புகுந்தவள்
காய்ந்திருந்த என் கன்னங்கள் யாவும்
அவளின் எச்சில் முத்தங்களை இட்டு நிரப்பினாள்.
மனதிலே கறைகளும் கவலைகளும் நீங்கிப் போய்
கனிந்திருந்த என் கண்களில் இருந்து
அன்பாய் வழிந்தன கண்ணீர் துளிகள்.
"விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே
எனக்கு நீ உனைத் தர எதற்கு ஆராய்ச்சியே?
நீ தொட்டால் நிலவினில் கரைகளும் நீங்குமே..."
வானொலிப் பெட்டியில் உன்னி கிருஷ்ணன்
கவிஞர் அய்யாவின் காதல் வரிகளுக்கு
உயிர் கொடுத்து உருகிக் கொண்டிருந்தார் பக்கத்திலே.
Comments
Post a Comment