பக்கத்து வீட்டு மரணம்....
பக்கத்து வீட்டுக்காரர் தன் அன்பு மனைவி
திடீர் மாரடைப்பில் காலமாகிப் போனதாய்
கலங்கிய கண்களுடன் சேதி சொல்லிப் போனார் .
அதிர்ந்து போனாள் என் அன்பு மனைவி
எதை நினைத்து அதிர்ந்தாளோ?
மூக்குக் கண்ணாடியை இழுத்து விட்டுக் கொண்ட
எழுபது வயது என் ஆரோக்கிய தாய்
"புண்ணியவதி போய் சேர்ந்து விட்டாள்"
என்று கூறி மௌனமானாள்.
முப்பத்தி ஐந்து வயதில் மரணித்த அவள்
புண்ணியவதி என்றால்
எழுபது வயதில் என் தாயும்
ஐம்பது வயதில் நானும்
இன்னமும் புண்ணியம் ஏதும் செய்யவில்லையோ?
புத்தியில் எழுந்த கேள்வி
கீழிறங்கி இதயத்தை தாக்க
பக்கத்துக்கு வீட்டு புண்ணியவதி
அம்மாவிற்காய் ஆனந்தப் படுவதா
என் வீட்டு அம்மாவிற்கும் எனக்குமாய்
வருத்தப் படுவதா என்கிற குழப்பத்தில்
நானும் அதிர்ந்து அனைந்தேன்.
"ஐயோ ....என்னங்க..."
என்கிற என் மனைவியின் அலறல்
என் உயிருக்கு கேட்டது
உடலுக்கு கேட்கவில்லை.
Comments
Post a Comment