நீயும், நானும் .....இருபதிலிருந்து அறுபதுவரை
நம்மை நாம் நம் அன்பினால்
அணைத்திட்ட அழகிய நாட்கள்
ஒருவரோடு ஒருவரென
ஒருவருக்குள் ஒருவரென
ஏழு ஜென்ம வாழ்வினை
ஏழு நிமிடங்கள் போலவே
வாழ்ந்திட்ட வசந்த நாட்கள்
என் உயிரெங்கும் உன் உணர்வெனவே
என் உணர்வெங்கும் உன் உயிரெனவே
உன் உயிரெங்கும் என் உணர்வெனவே
உன் உணர்வெங்கும் என் உயிரெனவே
உறவாடி உவப்பெய்திய உத்தம நாட்கள்
காதலெனும் கலை கற்று
கற்ற கலையில் வெற்றி பெற்று
காதலோடு காதலிலே
கரைந்திட்ட காவிய நாட்கள்
உன் சிணுங்கல்களில் சில நேரம்
என் சில்மிசங்களில் பல நேரம்
உன் காதலில் வெகு நேரம்
நம் கலவியில் கன நேரமென
காற்றாய் பறந்த கவித்துவமான
நம் காலை பொழுதுகள்
என்னை நீ மயக்கவும்
உன்னை நான் கிறக்கவும்
நம்மை நாம் மறக்கவுமென
மயக்கியும் மயங்கியும் கழிந்த
நம் மாலை பொழுதுகள்
தடி ஊன்றித் தள்ளாடி
தள்ளாமை வெல்லாமல்
தனிமையிலே தவிப்போடு நாம் தவிக்கும்
இயலாமை இயல்பான இந்த அறுபதிலும்
இதழோரம் இனிய புன்னகை
மனதுக்குள் மத்தாபூ
நினைவினில் மழைச் சாரல்
கனவினில் கலைக் கூடல்
இருந்தாலும் இறவாது
இறந்தாலும் மறவாது
உன் கண்ணில் நான் கண்ட என் ஓளி ஓவியம்
என் கண்ணில் நீ கண்ட நம் உயிர் ஓவியம்
என் இருபதினில் எனக்குள் நீ நிறைந்தாய்
உன் இருபதினில் உனக்குள் நான் உறைந்தேன்
நேற்றைய மாலை போலவும்
இன்றைய காலை போலவும்
எத்தனை பசுமையாய் எத்தனை செழுமையாய்
இந்த அறுபதிலும் நமக்குள்ளே
அந்த இருபதினில் நாம் கண்ட இனிய நாட்கள்
நடுங்கும் என் கரம் பற்றி
குறுகிய என் தோள்களில்
சுருங்கிய உன் முகம் சாய்த்து
என் தலைவி நீ உன் தலை துவள்வாய்
குளிர்ந்த உன் கரம் பற்றி
வெளிறிய உன் தலையில்
கருகிய என் முகம் புதைத்து
உன் தலைவன் நான் என் உயிர் துறப்பேன்
நாம் இறந்தாலும் இறவாது
என் மீது நீ கொண்ட அன்பும்
உன் மீது நான் கொண்ட பாசமும்
நம் மீது நாம் கொண்ட காதலும்
கூடு விட்டு வீடு தேடி
காற்றோடு கலக்கட்டும் நம் காதல் நெஞ்சங்கள்
இறை நாட்டம் அதுவென்றால்
மீண்டும் இருபதினில் தொடங்கி
இறப்பே இல்லாது இணைவோம்
சோடியாய் சொர்க்கத்தின் சோலைகளில்
Comments
Post a Comment