"போவோமா ஊர்கோலம் ....



சாலையோரம் நிற்கும் பூ பூத்த புளிய மரங்கள் 
நிழல்தர நிற்பதாகவே நினைக்கிறாய் நீ
அவை நிழல் தேடி நிற்பதாக நினைக்கிறேன் நான்

விடிகாலை சூரியன் வெளிச்சம் தரவே என்கிறாய் நீ
இருளை கண்டு பயந்து எத்தனை நேரம் தான்
பதுங்கி இருக்கும் பாவம் என்கிறேன் நான்

காண்பவை நம் கண்களில் ஒன்றாயினும்
காட்சிகளின் கற்பித்தல் நம் புத்தியில் வெவ்வேறு
விழிகளில் என் புத்தியை வைக்கிறேன் நான்
விழிகளில் உன் இதயத்தை வைக்கிறாய் நீ
இயற்கையை இயல்பாய் பார்க்கிறாய் நீ
இயற்கையான உன் இயல்பை வியப்போடு பார்க்கிறேன் நான்

நாம் கடந்து வந்த பாதை எங்கும்
நீ பதித்து வந்த உன் பார்வைகள்
மலர்ந்து நின்ற மலர்கள் தோறும்
நீ தூவி வந்த உன் மகிழ்ச்சியின் தூறல்கள்
குழந்தையென உன் குதூகலம்
உன் குதூகலத்தில் வாலிபன் நான் தொலைத்தேன் என் வயோதிகம்

என் அறிவின் திண்மையில் நான் ஆளுமை கொண்டது அந்தக் காலம்
உன் இயல்பின் இனிமையில் நான் ஆண்டவன் காண்பது இந்தக் 
காலம்
குதூகல என் குழந்தையே, வானத்து என் தேவதையே
வளர்ந்த என் புத்தி, முதிர்ந்த என் சித்தி
இரண்டையும் தவிர்த்த என் பிஞ்சு விரல்களை பற்றிக்கொள் நீ
என் புறக்கண்ணில் நீ புகுந்து புறப்படு
என் அறிவுக் கண் மூடி என் அகக் கண் திறக்கச் செய்

சாலையோர பூ பூத்த புளிய மரங்கள்
நிழல் தரவே நிற்பதாக நானும் நினைக்கணும்
விடிகாலை சூரியன் வெளிச்சம் தரவே என நானும் வியக்கணும்
இயற்கையை இயல்பாய் நானும் பார்க்கணும்
அந்த இயல்போடு இயற்கையை நானும் ரசிக்கணும்
நாம் கடக்கப் போகும் பாதை எங்கும் என் விழிகளை நானும் பதிக்கணும்
மலர்ந்து நிற்கும் மலர்களாலே மலரும் என் மகிழ்ச்சியை நானும் ருசிக்கணும்

"போவோமா ஊர்கோலம் ....பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆரம்பம்"

Comments

Popular posts from this blog

இது ஒரு பொன் மாலை பொழுது....

விபரீத விளையாட்டு

வாராயோ என் தோழி வாராயோ?