ஒரு மாலை நேரத்து மயக்கம் ......
சிலு சிலு காற்றிலே
சின்னதாய் ஒரு சிணுங்கல்
சிணுங்கலில் சிணுங்குது உன் பாதக் கொலுசு.
வழிந்தோடும் வாய்க்காலில்
சிதறி ஓடும் தண்ணீராய்
உன் சிரிப்பின் சில்மிஷம்.
மயக்கும் மாலையின் மேற்கு வானில்
மெல்ல மறையும் மாலை கதிரவன்
மறையும் போதும் மறக்காமல்
நீல வானமெங்கும் அது சிந்திப்போன வண்ணங்கள்
வண்ணங்களில் மெல்லப் பூக்குது உன் தாவணிப்பூ.
உள்ளத்தில் உனை சுமந்து
நினைவினில் உனை கலந்து
நான் கடந்தது பல மைல் கல்.
இமைகளை சட்டென தொட்டது நீர்த்துளி
வண்ணங்களில் கரைந்தபடி வந்தது மழைச்சாரல்
மழைச்சாரலில் நனைந்தபடி வந்தது
உன் மல்லிகைபூவின் மணம்
மழையிலும் அந்த மணத்திலும்
மயங்கிப்போனது என் மனம்
மாலை நேரத்து அந்த மயக்கம்
இரவினில் கெடுத்தது என் உறக்கம்.
Comments
Post a Comment