கையளவு என் கவிதை தொகுப்பு...



ஏதாவது கிருக்கலாமே என்றெண்ணி
இன்று என் கவிதை தொகுப்பை
தூசு தட்டி தும்மலுடன் திறந்து
ஏதுமே எழுதியிராத ஒரு வெள்ளை பக்கத்தில் ஏதோ எழுத எண்ணி
சரியான வார்த்தைகளையும் , வரிகளையும் தேட நினைத்து கண் மூடினேன் .....

திடும் என்று இடித்த இடி ஒலியில்
விழித்துப் பார்த்த போதுதான் தெரிந்தது
வைத்த பேனா வைத்த படி இருக்க
வெகு நேரத்திற்கு தூங்கித்தான் போயிருக்கிறேன்
வெகு சுகமாக என்று.

துக்கம் இன்றி தூங்க இனி இதுதான் சரியான வழி
இந்த உணர்தலில் பிறந்தது
உள்ளத்தில் உற்சாக வெள்ளம்
இனி என் கவிதை தொகுப்பில்
எப்போதோ உள்ளத்தில் உற்சாகம் இருந்த போது
காகித பக்கங்களில் என் எழுதுகோல்
உதிர்த்த வார்த்தைகளும் வரிகளும்,
ஏதுமே எழுதாது விட்டு போன
ஏதோ ஒரு சில வெள்ளை பக்கங்களும் இருக்குமேயன்றி
நிச்சயம் இருக்காது தூசியும் துப்பட்டையும்.

சுத்தமான தலையணையே இங்கு வெகு சுகம்
தயை கூர்ந்து இப்போதே கேட்டு வராதீர்
எங்கே பார்க்கலாம் எப்படித்தான் இருக்கிறது
என் கலை கிறுக்கல்கள் என்று.

எந்த இடிக்கும் விழிக்காது
என் விழிகள் நிரந்தரமாக மூடிப்போகும் அந்த நாளில்
என் நெஞ்சைப்பிளந்து
விலா எழும்புகளை ஒடித்தெரிந்து
நெஞ்சுக்கூட்டுக்குள் உங்கள் கைகளை விட்டு
அதிருஷ்டக்காரர்கள் பத்திரமாக எடுத்துக்கொள்ளுங்கள்
கையளவு இருக்கும் என் கவிதை தொகுப்பினை.

Comments

Popular posts from this blog

நிஜமும் நடிப்பும் ....நானும் நாமும்

சஹாரா பூக்கள் பூத்ததோ....

வாராயோ என் தோழி வாராயோ?