நிகழ்வுகளும் நானும் ....

என் ஆத்தா, என் அப்பன்,
என் மனையாள், என் மக்கள்
என்று மட்டுமே இருந்த என் மனதில்
அடிக்கடி மலரது ஒரு எண்ணம்:
எல்லோருக்கும் ஏதேனும் செய்யோணும்.

நிகழ்ந்ததும், நிகழ்த்தபட்டதுமாய்
ஊரெங்கும் எத்தனையோ நிகழ்வுகள்;
அத்தனை நிகழ்வுகளுக்கு முன்னும் பின்னும் 
எத்தனையோ உணர்வுகள்.

உள்ளத்தை உறைய வைக்கும் நிகழ்வுகள் ஒருபுறம்;
நெஞ்சத்தை நெகிழவைக்கும் நிகழ்வுகள் மறுபுறம்.

காரணமின்றி இங்கே ஏதும் நிகழ்வதில்லையாம் 
மழை இறைவனின் மகிழ்ச்சி;
புயல் அவனின் கோபம்;
நன்றாய் இருப்பவன் திடீரென நசிந்தால் அது விதி;
ஒழுங்காய் ஓடும் ரயில் ஓர் நாள்
திடீரென தடம் புரண்டால் அது சதி.

சில நிகழ்வுகளும் நிகழ்வுகளுக்கான காரணங்களும்
எத்தனை சிந்தித்தும் புரியப் போவதில்லை என்பது
சிந்தித்துப் பார்த்தால் தெரிந்து விடுகிறது.

நிகழ்வுகளுக்காய் காத்திருந்து
அறிவு ஜீவியாக நம்மை எண்ணியே
ஒவ்வொரு நிகழ்வு பற்றிய நம் உள்ளக் கருத்தை
உரத்துக்கூறி, ஊர் கூட்டி உபதேசம் செய்து
எத்தனை பேர் என் பின்னால் 
என பார்த்துக் கொள்வதிலேயே 
கழிந்திடுமோ நம் காலம்?

மழைக்கால மத்தியான நேரத்தில் 
சுடு சோறு எனக்கு சுகம்.
ஆயினும் நான் அறிவேன் 
அதே நேரத்தில் இங்கே பலருக்கு பலகாரம்
கஞ்சிச் சோறும், மா ஊறுகாயும் மட்டுமே என்பதை.

அவர்களுக்கெல்லாம் சுடு சோறு எனும் சுகம் கொடுக்க
துடித்த வேகத்தில் படிகிறது வெட்கங்கெட்ட மனம்.
எல்லோருக்கும் எல்லாமும் எப்போதும் செய்ய முடியாது போனாலும்
யாருக்கேனும் ஏதேனும் எப்போதாகிலும் செய்ய முடியணும்.

என் எண்ணங்கள் எல்லாம் ஈடேற
எப்போது நிகழும் ஒரு நிகழ்வு என் வாழ்வில்?
நிகழவேண்டுமா, நிகழ்த்தவேண்டுமா?
காலம் கனிய நான் காத்திருக்க வேண்டுமா?
காலத்தை நான் கனிய வைக்க வேண்டுமா?

சில நேரங்களில் சும்மா இருத்தல் பெரும் சுகம் என்கிறார்கள்.
நம்மைச் சுற்றி இத்தனை நிகழ்வுகள் இருப்பினும் 
சும்மா இருந்து, சுடு சோறு சாப்பிட்டு
"சுகம், சுகமே ...ஏ..தொட தொடத் தானே" என
கவிதை கேட்டு கண் மயங்குதல்,
இசை கேட்டு இதயம் நெகிழுதல்
நலமோ? நியாயமோ?

Comments

Popular posts from this blog

நிஜமும் நடிப்பும் ....நானும் நாமும்

வாராயோ என் தோழி வாராயோ?

சஹாரா பூக்கள் பூத்ததோ....