நானும் அவர்களும், நானும் நானும்...
நானோ
"தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம் " என்றேன்
அவர்களோ
நீ அல்-கொய்தாவா இல்லை லக்ஷர்-இ-தோய்பாவா என்றார்கள்
நானோ
ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் என்றேன்
அவர்களோ
அனுமதிக்கு நாளொன்றுக்கு எத்தனை தருவாய் என்றார்கள்.
நானோ
"அறங்கள் யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்றேன்
அவர்களோ
தலைக்கு இருபத்திஐந்தாயி ரம் கொடுத்தால்
ஏழைக்கு எழுத்தறிவிக்க தயார் என்றார்கள்.
நானோ
அய்யோ மளிகைக்கடை கடனுக்கு என் தமிழ்ப்பெண்கள்
தங்கள் தலை முடியை விற்கிறார்களே என வேதனைப்பட்டேன்
அவர்களோ
ஆஹா ...கிலோவுக்கு ஐந்தாயிரம் தருகிறார்களாமே என குதூகளித்தனர்.
நானோ
அய்யோ ஏதும் செய்ய வக்கில்லையே எனக்கு என வேதனைப்பட்டேன்
அவர்களோ
நீ சும்மா இருப்பதே எல்லோருக்கும் சுகம் என்றார்கள்.
எல்லோரையும் போலவே நானும் சுகமாக தூங்கிப்போனேன்
சரி .....இங்கே இப்படியே சிலர் சும்மா, சுகமாக இருப்பதால்தானோ
அங்கே பலருக்கு எல்லாமே எப்போதும் சுமையாக இருக்கிறது
என்று நினைத்தவாறே.
தூக்கத்தில் தொடர்ந்தது .......
எனக்கும் அவர்களுக்குமான,
எனக்கும் எனக்குமான
என் தர்க்கப்போராட்டம்.
Comments
Post a Comment